ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஜெ! பிரதமருக்கு கடிதம்

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், ராமர் பாலம் தொடர்பாக மாநில அரசும் தனது நிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை வியாழக்கிழமை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்தால், நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரம்:

'சேது சமுத்திர திட்டம் தொடர்பான ஆய்வை முடிக்கவும் அறிக்கை தயாரிக்கவும் அதிக காலம் ஆகிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதனால், பச்செளரி குழுவின் அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் நகலை மனுதாரருக்கு (சுப்பிரமணியன் சுவாமி) அளிக்க வேண்டும்.

ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிய மனு மீது மத்திய அரசு இதுவரை தனது நிலையைத் தெளிவுபடுத்தவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைக் கேட்டு நீதிமன்றத்தில் கூடுதல் வழக்குரைஞர் தெரிவிக்க வேண்டும். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும்,' என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More