மும்பையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!

மும்பையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட விழாவில், பயங்கர ரகளையாகிவிட்டது. ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.மும்பை மாநகர விஜய் நற்பணி இயக்கத்தின் 5-ம் ஆண்டு விழா, கலை விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மும்பை அண்டாப்ஹில்லில் நேற்று நடந்தது.

விழாவில் இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மேடையில் வரிசையாக அமர்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் மேடையில் தோன்றினார். அப்போது மேடையில் நடந்தவாறு அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். விஜயை பார்த்து பேசிவிடவேண்டும் என்று துடித்த ரசிகர்கள் விஜயின் கால் மற்றும் கையை பிடித்து இழுத்தவாறு இடையூறு செய்யத் தொடங்கினர்.

ரசிகர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மேடையை நோக்கிச் சென்றனர். இதனால் கூட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் விழா மேடை அருகே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள் நொறுங்கின. நாற்காலிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. அந்த மைதானமே போர்க்களம் போல காட்சியளித்தது. விழாவில் நலிவடைந்தோர்களுக்கு தையல் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகளை நடிகர் விஜய் கையால் வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ரசிகர்களின் இடையூறு காரணமாக விஜய் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்காமல் சென்றுவிட்டார். இதனையடுத்து மாநகர விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More