தீவிபத்து - சென்னை விமான நிலையத்தில் 2 இடங்களில்!


சென்னை விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஹோட்டல் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண் ஒருவர் காலை 4.15 மணியளவில் காரில் வந்து இறங்கினார். அதன்பிறகு அவர் வந்த கார் விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டது.

அப்பகுதியில் அதிகளவிலான கார்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பணிப் பெண் வந்த காரின் முன்பகுதியில் இருந்து லேசான புகை கிளம்பியது. சில நிமிடங்களில் புகை அதிகமாகி தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட விமான நிலைய பணியாளர்கள், விமான நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காலை 4.45 மணிக்கு பன்னாட்டு விமான நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் பெயர் பலகையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஹோட்டல் பணியாளர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம், தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More